சென்னை: நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள எதிர்பார்ப்புக்குரிய தெலுங்கு திரைப்படமான “Aakasam Lo Oka Tara” (AOT) படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் வரும் நவம்பர் 20, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இப்படத்தை பவன் சாதினேனி எழுதி இயக்கியுள்ளார். துல்கர் சல்மானுடன் அறிமுக நடிகை சாத்விகா வீரவல்லி மற்றும் நடிகை ஸ்ருதி ஹாசன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
“Aakasam Lo Oka Tara” திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. இதன் மூலம் தெலுங்கு திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் பல்வேறு மொழி ரசிகர்களையும் சென்றடையும் வகையில் பான்-இந்தியா வெளியீடாக திட்டமிடப்பட்டுள்ளது.
படத்தின் கதைக்களம் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஒருவரின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களை மையமாகக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் துல்கர் சல்மான் கிருஷ்ணா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். சுஜித் சாரங் ஒளிப்பதிவையும், தேசிய விருது பெற்ற கே.எல்.பிரவீன் படத்தொகுப்பையும் கவனிக்கின்றனர்.
புதிய போஸ்டருடன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், துல்கர் சல்மான் ரசிகர்கள் மத்தியில் இப்படம் குறித்த எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.



