சென்னை: தமிழக வெற்றிக் கழகம் தலைமையில் உருவாகியுள்ள புதிய கூட்டணிக்கு “மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி” என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தக் கூட்டணியின் தலைவராக முதல்வர் விஜய் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற 2-வது ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. கூட்டத்தில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மதிமுக மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டணிக்கு சூட்டப்பட்டுள்ள பெயரில் மதச்சார்பின்மை மற்றும் சமூகநீதி ஆகிய கொள்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக கூட்டணி கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். விசிக தலைவர் திருமாவளவன், இதுவரை ஆதரவு கட்சிகளாக இருந்தவர்கள் தற்போது கூட்டணிக் கட்சிகளாக இணைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதாகவும், புதிய கூட்டணியில் இடம்பெறவில்லை என்றும் இடதுசாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய கூட்டணி, தேர்தல் நடவடிக்கைகளை மட்டுமே மையமாகக் கொண்டதல்ல என்றும், மதச்சார்பின்மை, சமூகநீதி உள்ளிட்ட கொள்கைகளை முன்னிறுத்தும் வகையில் செயல்படும் என்றும் கூட்டணி தரப்பில் கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் தமிழக அரசியலில் தவெக தலைமையிலான கூட்டணி புதிய அரசியல் வடிவத்தைப் பெற்றுள்ளது.



