அரசியல்

தமிழ்நாடு சட்டப்பேரவை சட்ட விதிகள் ஆய்வுக்குழு உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் எம்.எல்.ஏ. நியமனம்!

top-news

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் 'சட்ட விதிகள் ஆய்வுக்குழு' (Committee on Subordinate Legislation) உறுப்பினராக கோவை கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளார்.

சட்டமன்ற நடைமுறைகள், அவையின் செயல்பாடுகள் மற்றும் அலுவல் விதிகளின் குறைபாடுகளை ஆராய்ந்து, காலத்திற்கு ஏற்ப புதிய விதிகளைச் சேர்ப்பதற்கும் பரிந்துரைகளை வழங்குவதற்கும் இந்த ஆய்வுக்குழு முக்கியப் பங்கு வகிக்கிறது.

தனக்கு வழங்கப்பட்டுள்ள இந்தக் கூடுதல் பொறுப்பு குறித்து நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள கனிமொழி சந்தோஷ் எம்.எல்.ஏ.:

"தமிழ்நாடு சட்டப்பேரவையின் சட்ட விதிகள் ஆய்வுக்குழு உறுப்பினராக என்னைத் தேர்வு செய்து, கூடுதல் பொறுப்பு வழங்கியமைக்கு எனது மரியாதையுடன் கூடிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஜனநாயகத்தின் மாண்பைப் போற்றி, சட்டப்பேரவையின் செயல்பாட்டுச் சிறப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், எனக்கு அளிக்கப்பட்டுள்ள இந்தப் பொறுப்பை முழு அர்ப்பணிப்புடனும் பொறுப்புணர்வுடனும் நிறைவேற்றுவேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

சட்டமன்றப் பணிகளுடன் கூடுதலாக வழங்கப்பட்டுள்ள இந்தப் பொறுப்பின் மூலம், பேரவை நடவடிக்கைகளின் சீரான செயல்பாட்டிற்குத் தனது பங்களிப்பை அளிக்கவுள்ளதாக அவர் உறுதி அளித்துள்ளார்.