தமிழக அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகளுக்கு முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ள முதல்-அமைச்சர் விஜய், “ஊழல் புகாரில் சிக்கினால் அமைச்சர் பதவி உடனடியாக பறிக்கப்படும்” என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முதல்வர் விஜய், அரசின் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை, நேர்மை மற்றும் பொறுப்புணர்வு கட்டாயம் கடைபிடிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அரசின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை எந்தவிதத்திலும் பாதிக்கும் செயல்கள் அனுமதிக்கப்பட மாட்டாது என்றும், ஊழல் குறித்த குற்றச்சாட்டுகள் உறுதியான ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், அனைத்து துறைகளிலும் மக்கள் நலத் திட்டங்கள் வெளிப்படையாக செயல்படுத்தப்பட வேண்டும் என்றும், பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் விரைவாக விசாரிக்கப்பட்டு தீர்வு காணப்பட வேண்டும் என்றும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
முதல்வர் விஜய்யின் இந்தக் கடுமையான நிலைப்பாடு, நிர்வாகத்தில் ஒழுக்கம் மற்றும் ஊழலற்ற ஆட்சியை உறுதி செய்யும் முக்கிய நடவடிக்கையாக அரசியல் வட்டாரங்களில் பார்க்கப்படுகிறது.



