சென்னை சைதாப்பேட்டையில் அமைந்துள்ள எம்.சி. ராஜா அரசு மாணவர் விடுதிக்கு முதல்-அமைச்சர் விஜய் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, விடுதியில் தங்கியுள்ள மாணவர்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகள், தேவைகள் மற்றும் வசதிகள் குறித்து விரிவாக கேட்டறிந்தார்.
விடுதியின் தங்கும் அறைகள், உணவகம், சமையலறை, குடிநீர் வசதி, கழிப்பறைகள் மற்றும் படிப்பு சூழல் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை முதல்வர் நேரில் பார்வையிட்டார். மாணவர்களுடன் கலந்துரையாடிய அவர், கல்வி மற்றும் விடுதி வசதிகள் தொடர்பாக எழுப்பப்பட்ட கோரிக்கைகளை கவனமாக பதிவு செய்தார்.
மாணவர்களின் நலனுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் தரமாக வழங்கப்பட வேண்டும் என்றும், குறைபாடுகள் இருந்தால் உடனடியாக சரிசெய்ய அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், அரசு விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களுக்கு பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான சூழலை உறுதி செய்வது அரசின் பொறுப்பு என்றும், தரமான உணவு, தூய்மை மற்றும் கல்விக்கேற்ற வசதிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
முதல்வரின் இந்த திடீர் ஆய்வு, மாணவர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியதுடன், அரசு விடுதிகளின் தரத்தை மேம்படுத்தும் நடவடிக்கையாகவும் பார்க்கப்படுகிறது.



