சென்னை: நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில், சென்னை பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதல்வருமான விஜய்யின் வெற்றியை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், அவருக்குப் புதிதாக நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கின் பின்னணி: கடந்த சட்டசபை தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்ட தவெக தலைவர் விஜய், 1,20,365 வாக்குகளைப் பெற்று, 53,715 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் 66,650 வாக்குகள் பெற்றிருந்தார்.
இந்நிலையில், விஜய்யின் வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி, திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் மற்றும் தொகுதி வாக்காளர்களான தினேஷ், லட்சுமி நரசிம்மன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் மனு தாக்கல் செய்தனர்.
திமுக வேட்பாளரின் குற்றச்சாட்டு: ஆர்.டி.சேகர் தனது மனுவில், "வேட்புமனுவில் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை விஜய் அளித்துள்ளார். அவரது சொத்து விவரங்கள் மற்றும் வழக்குகள் குறித்த விவரங்கள் முறையாகத் தெரிவிக்கப்படவில்லை. எனவே, பெரம்பூர் தொகுதியில் அவரது வெற்றி செல்லாது என அறிவிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
உயர் நீதிமன்ற உத்தரவு: இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆர்.டி.சேகர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரிச்சர்ட்சன் வில்சன், வழக்கில் எதிர்மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்டுள்ள முதல்வர் விஜய் மற்றும் தேர்தல் அதிகாரியிடம் நோட்டீஸ் இன்னும் சென்று சேரவில்லை எனத் தெரிவித்தார்.
இதனையடுத்து, முதல்வர் விஜய் மற்றும் தேர்தல் அதிகாரி உள்ளிட்டோருக்கு புதிதாக நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்குத் தள்ளிவைத்து உத்தரவிட்டார்.



