சென்னை: நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் 3 மாதங்களில், தமிழக அரசுக்கு மொத்தமாக ரூ.64,944.97 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக மத்திய தணிக்கைத் துறை (CAG) வெளியிட்டுள்ள தற்காலிக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் தமிழக அரசின் வருவாய் ரூ.63,755.70 கோடியாக இருந்த நிலையில், இந்த ஆண்டு ரூ.1,189.27 கோடி கூடுதலாக வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
வரி மற்றும் வரி அல்லாத வருவாய் விவரங்கள்
மாநில அரசின் சொந்த வரி வருவாய் இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.60,061.72 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இது ரூ.56,366.76 கோடியாக இருந்தது.
அதேபோல, கட்டணங்கள் மற்றும் சேவைகள் மூலம் கிடைக்கும் வரி அல்லாத வருவாய் ரூ.2,895.70 கோடியில் இருந்து ரூ.3,172 கோடியாக அதிகரித்துள்ளது. மாநில அரசுக்குக் கிடைத்த சொந்த வரி வருவாய் மற்றும் வரி அல்லாத வருவாய் ஆகியவை கணிசமான வளர்ச்சியைக் கண்டுள்ளன.
மத்திய அரசு மானியம் குறைந்தது
அதேவேளையில், மத்திய அரசிடமிருந்து மாநில அரசுக்கு வழங்கப்படும் மானியம் மற்றும் நிதிப் பகிர்வு கணிசமாகக் குறைந்துள்ளது. கடந்த ஆண்டின் முதல் 3 மாதங்களில் மத்திய அரசிடமிருந்து ரூ.4,493.23 கோடி மானியமாகக் கிடைத்த நிலையில், இந்த ஆண்டு அது ரூ.1,710 கோடியாகச் சரிந்துள்ளது.
மத்திய அரசின் மானிய உதவி குறைந்த போதிலும், மாநிலத்தின் சொந்த வரி வசூல் அதிகரித்துள்ளதால் தமிழக அரசின் மொத்த வருவாயில் நேர்மறை வளர்ச்சி சாத்தியமாகியுள்ளதாக நிதித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



