சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட சொத்து உரிமையாளர்கள் நிலுவை மற்றும் நடப்பு சொத்து வரியையும், தொழில் வரி செலுத்த வேண்டியவர்களும் வரும் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் வரியை செலுத்த வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ். சமீரன் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள சொத்து உரிமையாளர்கள் தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள சொத்து வரியை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் செலுத்த வேண்டும். செப்டம்பர் 30க்குப் பிறகு நிலுவையில் உள்ள சொத்து வரிக்கு விதிகளின்படி தனி வட்டி வசூலிக்கப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.
அதேபோல், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்படும் தொழில் வரியையும் செப்டம்பர் 30க்குள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வரி செலுத்துவோரின் வசதிக்காக செப்டம்பர் 19, 20, 26 மற்றும் 27 ஆகிய சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் சென்னை மாநகராட்சியின் மண்டல அலுவலகங்கள் மற்றும் ரிப்பன் கட்டடத்தில் உள்ள வருவாய்த்துறை பொது வசூல் மையங்கள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னை மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாகவும் சொத்து வரியை ஆன்லைனில் செலுத்தும் வசதி உள்ளது. கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் நெட் பேங்கிங் மூலம் ஆன்லைன் கட்டணம் செலுத்தலாம் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.
எனவே, வரி செலுத்த வேண்டியவர்கள் கடைசி நாளை எதிர்பார்க்காமல், செப்டம்பர் 30க்குள் நிலுவையின்றி வரியை செலுத்துமாறு சென்னை மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.



