சென்னை: தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், செப்டம்பர் 17ஆம் தேதி ஒரே நாளில் 244 பேருக்கு டெங்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, நடப்பாண்டில் தமிழகத்தில் டெங்கு பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16,577 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
செப்டம்பர் 17ஆம் தேதி மட்டும் தமிழகம் முழுவதும் பல்வேறு வகையான காய்ச்சல் காரணமாக 1,320 பேர் மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 244 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் மட்டும் ஒரே நாளில் 87 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, கோவை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், திருவள்ளூர், காஞ்சிபுரம், தஞ்சாவூர், விழுப்புரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, மாநிலம் முழுவதும் 25,000க்கும் மேற்பட்ட கொசு ஒழிப்பு மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் தடுப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகளிலும் காய்ச்சல் பாதிப்புகளை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
காய்ச்சல் ஏற்பட்டால் பொதுமக்கள் சுயமாக மருந்துகளை எடுத்துக்கொள்வதைத் தவிர்த்து, மருத்துவர்களின் ஆலோசனையுடன் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்வதன் மூலம் டெங்கு கொசு உற்பத்தியை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.



