தமிழ்நாடு

லண்டன் முதலீடுகள் குறித்து முதல்வர் விஜய் ஆலோசனை: புதிய திட்டங்கள் என்ன?

top-news

சென்னை: லண்டன் பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பியுள்ள முதல்-அமைச்சர் விஜய், அங்கு மேற்கொள்ளப்பட்ட முதலீட்டு பேச்சுவார்த்தைகள் மற்றும் புதிய தொழில் திட்டங்கள் குறித்து இன்று ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் முதல்வர் விஜய் செப்டம்பர் 10ஆம் தேதி லண்டன் சென்றார். ஆறு நாட்கள் நடைபெற்ற இந்தப் பயணத்தில் பல்வேறு நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் முதலீட்டாளர்களுடன் தமிழகத்தின் தொழில் வாய்ப்புகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லண்டன் பயணத்தின் மூலம் சுமார் ரூ.15,300 கோடி முதலீட்டு வாய்ப்புகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் 10,000க்கும் மேற்பட்ட நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும் என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதில், சம்வர்தனா மதர்சன் நிறுவனம் தமிழகத்தில் சுமார் ரூ.11,000 கோடி முதலீடு செய்யும் திட்டம், எர்ன்ஸ்ட் அண்ட் யங் நிறுவனம் ரூ.1,000 கோடி முதலீட்டில் உலகளாவிய திறன் மையம் அமைக்கும் திட்டம் உள்ளிட்ட முதலீட்டு உறுதிமொழிகள் இடம்பெற்றுள்ளன. திருவள்ளூரில் வில்சன் பவர் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் ரூ.300 கோடி முதலீட்டுத் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முதலீட்டு திட்டங்களின் அடுத்தகட்ட செயல்பாடுகள், தொழில் தொடங்குவதற்கான இடங்கள், வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் தமிழக அரசின் சார்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், லண்டன் பயணத்தில் பெறப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கான காலக்கெடு மற்றும் துறைவாரியான பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.