சென்னை: மதுராந்தகம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, தமிழக முதல்வரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் 2 நாட்கள் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுராந்தகம் தொகுதியில் தவெக வேட்பாளரை ஆதரித்து வரும் செப்டம்பர் 25 மற்றும் அக்டோபர் 2 ஆகிய தேதிகளில் விஜய் பிரசாரம் செய்ய உள்ளார். செப்டம்பர் 25 அன்று அச்சிறுப்பாக்கத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்று வாக்கு சேகரிக்கிறார்.
அதேபோல், அக்டோபர் 2 அன்று மதுராந்தகம் தொகுதியில் சாலைப் பிரசாரம் மேற்கொள்ள விஜய் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுக்கூட்டம் மற்றும் சாலைப் பிரசாரம் என இரு கட்டங்களாக தொகுதியில் பிரசாரம் நடைபெற உள்ளது.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தனித்தொகுதிகளுக்கும் அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அக்டோபர் 9ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இரு தொகுதிகளிலும் திமுக, அதிமுக, தவெக, கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் நாம் தமிழர் கட்சி என ஐந்து முனைப் போட்டி நிலவுகிறது.
மதுராந்தகத்தில் தவெக சார்பில் மரகதம் குமரவேல் போட்டியிடுகிறார். இடைத்தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்து வரும் நிலையில், முதல்வர் விஜய்யின் இரண்டு நாள் பிரசார நிகழ்ச்சிகள் தேர்தல் களத்தில் கவனம் பெற்றுள்ளன.



