திருச்சி: தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி குறித்து உடனடியாக எந்த முடிவுக்கும் வர வேண்டாம் என்றும், ஆட்சியின் செயல்பாடுகளை மதிப்பிடுவதற்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரகாஷ் ராஜிடம், தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், முதல்வர் விஜய் வாக்களித்தவர்களுக்கு மட்டுமின்றி, வாக்களிக்காதவர்களுக்கும் முதல்வராக இருப்பதாகக் குறிப்பிட்டார்.
புதிய அரசு பொறுப்பேற்று 120 நாட்களே ஆகியுள்ள நிலையில், அதன் செயல்பாடுகள் குறித்து உடனடியாக விமர்சனம் செய்வது சரியாக இருக்காது என்றும், குறைந்தபட்சம் ஓராண்டு காலம் அரசுக்கு அவகாசம் அளிக்க வேண்டும் என்றும் பிரகாஷ் ராஜ் கூறினார்.
மேலும், தேர்தலுக்கு முன்பே விஜய் தொடர்பாக தனக்கு சில சந்தேகங்கள் இருந்ததாகவும், இருப்பினும் மக்கள் தேர்தலில் அவர்களைத் தேர்வு செய்து ஆட்சி அமைக்க வாய்ப்பு வழங்கியுள்ள நிலையில், அந்தத் தீர்ப்பை மதிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
அதேநேரத்தில், ஓராண்டுக்குப் பிறகும் அரசின் செயல்பாடுகள் சரியாக இல்லை என்று தாம் கருதினால், ஆட்சியிடம் கேள்வி எழுப்புவேன் என்றும் பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார். ஆட்சியில் இருப்பவர்களை தனிப்பட்ட விருப்பு அல்லது வெறுப்பின் அடிப்படையில் உடனடியாக விமர்சிக்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் புதிய அரசின் செயல்பாடுகள் குறித்து அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு தரப்பினர் கருத்துகளை தெரிவித்து வரும் நிலையில், பிரகாஷ் ராஜின் இந்தக் கருத்தும் கவனம் பெற்றுள்ளது.



