சென்னை: தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம், 6 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் இன்று முதல் விரிவுபடுத்தப்படுகிறது.
இதன் மூலம் மாநிலம் முழுவதும் 15,454 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் சுமார் 15.30 லட்சம் மாணவ, மாணவிகள் கூடுதலாக பயன்பெற உள்ளனர். இதற்காக நடப்பு நிதியாண்டில் ரூ.217.63 கோடி கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. திட்டத்திற்கான மொத்த நிதி ஒதுக்கீடு ரூ.724 கோடியாக உயர்ந்துள்ளது.
விரிவாக்கப்பட்ட திட்டத்தை சென்னை திருவான்மியூர் காந்தி கிராமத்தில் உள்ள சென்னை நடுநிலைப் பள்ளியில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் இன்று தொடங்கி வைக்கிறார். மாணவர்களுக்கு காலை உணவு வழங்கி, அவர்களுடன் அமர்ந்து உணவருந்தும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி பகுதிகளில் ஒருங்கிணைந்த சமையல் கூடங்கள் மூலமாகவும், பிற நகர்ப்புற பகுதிகளில் ஒருங்கிணைந்த சமையல் கூடங்கள் மூலமாகவும் உணவு தயாரித்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஊரகப் பகுதிகளில் பள்ளி அளவில் சுயஉதவிக் குழு உறுப்பினர்கள் மூலம் காலை உணவு தயாரித்து வழங்கப்பட உள்ளது.
இதனிடையே, காலை உணவின் ஊட்டச்சத்து மதிப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் உணவு பட்டியலை மாற்றியமைப்பது குறித்தும் அரசு பரிசீலித்து வருகிறது. அதிக புரதச்சத்து கொண்ட உணவு வகைகளை சேர்ப்பதற்காக சமையல் நிபுணர்கள், கல்வியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் உள்ளிட்டோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் செங்கல்பட்டு மற்றும் திருப்பூர் மாவட்டங்களைத் தவிர, மற்ற மாவட்டங்களில் விரிவாக்கப்பட்ட திட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.



