தமிழ்நாடு

மேகதாது தீர்மான திருத்தத்துக்கு எதிரான அதிமுக வழக்கு தள்ளுபடி: சென்னை ஐகோர்ட் உத்தரவு!

top-news

சென்னை: மேகதாது அணை கட்டுவதற்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் பின்னர் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தை எதிர்த்து அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் கர்நாடக அரசு அணை கட்டும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த ஜூன் 19-ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானத்தில், மேகதாது விவகாரம் தொடர்பாக புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற வாசகம் பின்னர் சேர்க்கப்பட்டது. இந்தத் திருத்தத்தையே அதிமுக தரப்பு நீதிமன்றத்தில் எதிர்த்தது. 

அக்ரி கிருஷ்ணமூர்த்தி தரப்பில் ஆஜரானவர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு முன்கூட்டியே வழங்கப்பட்ட தீர்மான நகலில் இந்த வாசகம் இடம்பெறவில்லை என்றும், திருத்தம் குறித்து தனியாக விவாதம் நடத்தப்படாமல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் வாதிட்டனர். மேலும், திருத்தப்பட்ட தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்படவில்லை என்றும் அவர்கள் தரப்பில் கூறப்பட்டது. 

இதற்கு தமிழக அரசு தரப்பில், சட்டப்பேரவை நடவடிக்கைகளை நீதிமன்றத்தில் கேள்வி எழுப்புவதற்கு அரசியலமைப்புச் சட்டம் கட்டுப்பாடுகளை விதிப்பதாகவும், சம்பந்தப்பட்ட தீர்மானம் சட்டப்பேரவையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு நிறைவேற்றப்பட்டதாகவும் வாதிடப்பட்டது. இந்த வாதங்களுக்கு ஆதரவாக சட்டப்பேரவை நிகழ்வுகளின் காணொலி பதிவுகளும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வழக்கை தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இருதரப்பு வாதங்களையும் பரிசீலித்த நீதிபதிகள், அதிமுக கொறடா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.