புதுடெல்லி: இந்தியா தலைமையில் நடைபெற்ற 18வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்ற ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், தனது டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியாவில் இருந்து புறப்பட்டார். இரண்டு நாள் நடைபெற்ற மாநாட்டில் பல்வேறு உலகளாவிய விவகாரங்கள் மற்றும் உறுப்பு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மாநாட்டின் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடியுடன் புதின் இருதரப்பு பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டார். அப்போது இந்தியா, ரஷ்யா இடையேயான சிறப்பு மற்றும் முன்னுரிமை பெற்ற மூலோபாய கூட்டாண்மை, வர்த்தகம், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்தனர்.
மேற்கு ஆசியா மற்றும் கருங்கடல் பிராந்தியத்தில் நிலவும் மோதல்கள் உள்ளிட்ட சர்வதேச விவகாரங்களும் இருதரப்பு பேச்சுவார்த்தையில் இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
இந்த மாநாட்டில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதின் உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். உலகளாவிய சவால்களுக்கு ஒருங்கிணைந்த தீர்வுகளை உருவாக்குதல், பொருளாதார ஒத்துழைப்பை அதிகரித்தல், வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் இணைந்து செயல்படுதல் உள்ளிட்டவை மாநாட்டின் முக்கிய அம்சங்களாக அமைந்தன.
புதினை டெல்லி விமான நிலையத்தில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் வழியனுப்பி வைத்தார். இந்தியா, ரஷ்யா இடையேயான நீண்டகால சிறப்பு மூலோபாய உறவை மேலும் முன்னெடுத்துச் செல்ல இந்தியா உறுதிபூண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.



