லண்டன்: சில்வர்ஸ்டோனில் நடைபெற்ற 2026 மிச்செலின் லீ மேன்ஸ் கப் கார் பந்தயத்தில், நடிகர் அஜித் குமார் மற்றும் பிரெஞ்சு ஓட்டுநர் ரோமைன் வோஸ்னியாக் இணைந்து பங்கேற்ற அஜித் ரெட்ஆண்ட் பை விராஜ் அணி, ஒட்டுமொத்தமாக 38வது இடத்தைப் பிடித்தது.
16வது எண் கொண்ட லிஜியர் காரில் பந்தயத்தை தொடங்கிய அஜித் அணி, ஆரம்ப கட்டங்களில் சிறப்பாக செயல்பட்டு 8வது இடம் வரை முன்னேறியது. பின்னர் பந்தயத்தின் ஒரு கட்டத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக காரை மீட்பு குழுவினர் சீரமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதையடுத்து மீண்டும் பந்தயத்தை தொடர்ந்த அணி, இறுதியில் 38வது இடத்தில் போட்டியை நிறைவு செய்தது.
எனினும், LMP3 Pro/Am பிரிவில் 3வது இடத்தை அஜித் அணி பிடித்துள்ளது. இதனால் ஒட்டுமொத்த தரவரிசையில் பின்னடைவு ஏற்பட்டிருந்தாலும், தங்களது பிரிவில் அணி குறிப்பிடத்தக்க முடிவை பதிவு செய்துள்ளது.
சில்வர்ஸ்டோன் சுற்று 2026 மிச்செலின் லீ மேன்ஸ் கப் தொடரின் முக்கியமான சுற்றுகளில் ஒன்றாகும். அடுத்ததாக போர்ச்சுகலின் போர்டிமாவோ சுற்று அக்டோபரில் நடைபெற உள்ளது.
சில்வர்ஸ்டோன் பந்தயத்தின் போது தமிழக முதல்வர் விஜய் நேரில் கலந்து கொண்டு போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். நடிகை திரிஷா உள்ளிட்டோரும் போட்டியை நேரில் கண்டுகளித்தனர். இதனால் அஜித்தின் கார் பந்தயம் சர்வதேச மோட்டார் ஸ்போர்ட்ஸ் ரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றி, தமிழக ரசிகர்கள் மத்தியிலும் கூடுதல் கவனம் பெற்றது.



