பெங்களூரு: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கர்நாடகாவில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, அவர் பங்கேற்க இருந்த முக்கிய நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. மருத்துவர்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தியதைத் தொடர்ந்து, அவர் தனது நிகழ்ச்சிகளைத் தவிர்த்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கர்நாடக மாநிலம் உப்பள்ளியில் தங்கியிருந்த அமித்ஷா, சனிக்கிழமை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை தொடர்பான கட்டிட திறப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருந்தார். நிகழ்ச்சிக்கு தயாராகிக் கொண்டிருந்தபோது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து மருத்துவர்கள் ஓட்டலுக்கு சென்று அவரைப் பரிசோதித்து சிகிச்சை அளித்தனர். வாந்தி மற்றும் நீரிழப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மூத்த பாஜக தலைவரும் மத்திய அமைச்சருமான பிரகலாத் ஜோஷி, அமித்ஷா தற்போது நலமாக இருப்பதாக தெரிவித்தார்.
அமித்ஷா பங்கேற்க இருந்த உப்பள்ளி நிகழ்ச்சிகள் அவரது இல்லாமலேயே நடைபெற்றன. அதேபோல், பெலகாவி மாவட்டம் எக்சாம்பாவில் நடைபெற இருந்த கூட்டுறவு கடன் சங்க கட்டிட திறப்பு விழாவும் ரத்து செய்யப்பட்டது.
பின்னர் மாலை அமித்ஷா உப்பள்ளியில் உள்ள மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்துக்குச் சென்று பார்வையிட்டதாகவும், தொடர்ந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



