இந்தியா

“கல்வி தனிப்பட்ட முன்னேற்றத்துக்காக மட்டுமல்ல” : மாணவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு அறிவுரை!

top-news

சென்னை: மாணவர்கள் தங்களது கல்வியையும் திறமையையும் தனிப்பட்ட முன்னேற்றத்துக்காக மட்டுமின்றி, சமூகத்தின் நலனுக்கும் பயன்படுத்த வேண்டும் என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு வலியுறுத்தியுள்ளார். 

குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள மகாராஜா சாயாஜிராவ் பரோடா பல்கலைக்கழகத்தின் 75-வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஜனாதிபதி, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், மாணவர்கள் தங்களது கல்வியை தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் மட்டுமே பயன்படுத்துவது என்ற எண்ணத்தைத் தாண்டி, பொதுநலனுக்கு எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதையும் சிந்திக்க வேண்டும் என்று கூறினார்.

பணியில் ஈடுபடும் போது தேசம் மற்றும் சமூகத்தின் நலனுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும், அவ்வாறு செயல்பட்டால் நாட்டின் வளர்ச்சியுடன் தனிநபர்களின் முன்னேற்றமும் சாத்தியமாகும் என்றும் திரவுபதி முர்மு தெரிவித்தார். 

பொறியாளர்கள் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் தொழில்நுட்பங்களை உருவாக்க வேண்டும் என்றும், மருத்துவர்கள் மருத்துவத்தை வெறும் தொழிலாக பார்க்காமல் சேவை மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

அதேபோல், அறிவியலாளர்கள் மனிதகுலம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் ஆராய்ச்சிகளில் ஈடுபட வேண்டும் என்றும், கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் தங்களது படைப்புகள் மூலம் சமூகத்தின் உணர்வுப்பூர்வமான பண்பை வளப்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். 

பிறருக்கு சேவை செய்வதில்தான் உண்மையான மனநிறைவு கிடைக்கும் என்றும், பணம் மட்டுமே வாழ்க்கையின் முழுமையான நோக்கமாக இருக்கக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.