புதுடெல்லி: வரும் செப்டம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை பொதுத்துறை வங்கிகள் மற்றும் பிராந்திய கிராமப்புற வங்கிகள் வழக்கம்போல் செயல்படும் என மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. வங்கி வேலைநிறுத்தத்தால் தொடர்ந்து பல நாட்கள் சேவைகள் பாதிக்கப்படுவதைத் தவிர்க்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பான யுனைடெட் ஃபோரம் ஆஃப் பேங்க் யூனியன்ஸ் (UFBU), செப்டம்பர் 28 முதல் 30 வரை நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இதற்கு முன்பாக செப்டம்பர் 26, 27 ஆகிய தேதிகள் வார இறுதி நாட்களாக அமைந்துள்ளதால், வங்கி சேவைகள் தொடர்ந்து பல நாட்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை கருத்தில் கொண்டு, பொதுமக்களின் வங்கி தேவைகள் நீண்ட நாட்களுக்கு பாதிக்கப்படாமல் இருப்பதற்காக செப்டம்பர் 27 அன்று அனைத்து பொதுத்துறை வங்கிகள் மற்றும் பிராந்திய கிராமப்புற வங்கிகளும் செயல்பட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மேலும், செப்டம்பர் 27 அன்று வங்கி கிளைகள் மட்டுமின்றி, அலுவலகங்கள், ஏடிஎம் இணைப்பு கிளைகள் மற்றும் கரன்சி செஸ்ட்களும் செயல்பாட்டில் இருக்கும் வகையில் ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் வேலைநிறுத்தத்திற்கு முன்பாக வாடிக்கையாளர்கள் தங்களது முக்கியமான வங்கி பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வாய்ப்பு கிடைக்கும். அதே நேரத்தில், வேலைநிறுத்தம் நடைபெறுமா என்பது தொடர்பான அடுத்தகட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்புகளையும் வாடிக்கையாளர்கள் கவனிக்க வேண்டும்.



